தமிழகத்தில்,
அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி விருத்தாசலத்தில் இயங்கி வருகிறது.
1964-ம் ஆண்டு செராமிக் பயிற்சிப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது. செராமிக்
தொழில்நுட்பத்தில் 4 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. பின்னர்
1972-ம் ஆண்டு தொழில் வணிகத் துறை சார்பில், அரசு பீங்கான் தொழில்நுட்பக்
கல்லூரியாக அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டுப் படிப்பும், 6 மாதப் பயிற்சிக்
காலமாகவும் மாற்றப்பட்டது. கல்லூரி தொடங்கப்பட்டபோது சான்றிதழ் படிப்பாக
அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பட்டயப் படிப்பாக்கப்பட்டுள்ளது. இப்பட்டயப்
படிப்பைப் படிக்க 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற
மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இப்படிப்பை
படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகால படிப்பும், 6 மாத காலப் பயிற்சியும்
வழங்கப்படும். 12-ம் வகுப்பு முடித்து விட்டு பீங்கான் தொழில்நுட்பக்
கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு 2 ஆண்டு காலப் பட்டயப் படிப்பும்,
அத்துடன் 6 மாத காலப்பயிற்சியும் வழங்கப்படுகிறது.விருத்தாசலம்
மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செராமிக் தொழில் சார்ந்த
காரணிகள் அதிகம் காணப்படுகின்றன. இவ்வாறு தொழில் சார்ந்த வாய்ப்புகள்
நிரம்பியிருக்கும் விருத்தாசலத்தின் மையப் பகுதியில் இக்கல்லூரி
அமைந்துள்ளது. மேலும், மாணவர்கள் படிக்கின்றபோதே தொழில் சார்ந்த பயிற்சிகளை
பெறுவதற்கு ஏற்ப, கல்லூரிக்கு அருகிலேயே பல்வேறு பீங்கான் தொழிலை
உள்ளடக்கிய செராமிக் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரியில் படித்த
மாணவர்கள் நாட்டின் முன்னணி நிறுவனங்களான நெய்சர், பாரி, டால்மியா,
ஸ்பார்டெக், ஜான்சன் அண்ட்ஜான்சன் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
பெற்று வருகின்றனர். பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள்
கனடா, மலேசியா மற்றும் அரபு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில்
வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தொழில் சார்ந்த பட்டயப் படிப்பு படிக்க
விரும்பும் மாணவர்கள் பீங்கான் தொழில்நுட்பப் படிப்பைத் தேர்ந்தெடுத்துப்
படித்தால் எதிர்காலத்தில் அபரிமிதமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.விருத்தாசலம் - ஆலடி சாலையில் கல்லூரி அமையப் பெற்றுள்ளது. விருத்தாசலம் பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷன் அருகிலேயே உள்ளது.வெளியூர் மாணவர்கள் தங்குவதற்கு மாணவர் விடுதியும் செயல்பட்டு வருகிறது. கல்லூரி தொலைபேசி எண்: 04143- 260319
No comments:
Post a Comment